புவியியல்
சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள குளம்
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது.
சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ². சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன.
சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ மழை பெய்கிறது.
சென்னையிலுள்ள புகழ்பெற்ற மெரீனா கடற்கரை.
கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
[தொகு] நிர்வாகம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம். 1913ல் ரிப்பன் துரையை கௌரவப்படுத்தும் விதமாக கட்டப்பட்டது.
சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் தலைவர் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 155 வட்டங்களிலிருந்து 155 மாமன்றஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் மா. சுப்பிரமணியம் அவர்களும் துணைமேயர் சத்யபாமா அவர்களும்அக்டோபர் 29, 2006 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது.சென்னை மாநகராட்சி 1688-ல் துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது
தமிழகத் தமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது பின் மார்ச் 13 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். சென்னையில் 18 தமிழக சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.
இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை , தென் சென்னை ஆகியவை.
தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.
தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை மாநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.
[தொகு] பொருளாதாரம்
சென்னை தரமணியிலுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில த.தொ பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ் (TVS), அசோக் லெய்லாண்ட், ஹையுண்டாய் (Hyundai), போர்டு (Ford), மிட்சுபிஷி (Mitsubishi), டி.ஐ, எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய ராணுவம் தொடர்பான பல நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.
[தொகு] மக்கள்
பரங்கி மலையிலிருந்து காணப்படும் சென்னை மாநகரம்
சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி , ஆகியவை பயனில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேச படுகிறது.
அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.
இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த மொழி சிலரால் கொச்சை மொழியாக கருதப்படுகிறது.
[தொகு] கலாச்சாரம்
எழும்பூரில் உள்ள அரசு அருங்காடசியகம், Indo-Saracenic கட்டிடக்கலைக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்; ஹென்றி இர்வினால் வடிவமைக்கப் பட்டு, 1896ல் கட்டப்பட்டது.
சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.
சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப் படுகின்றன.
சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள 'விக்டோரியா பப்ளிக் ஹால்்'.
சென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப் படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப் படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப் படுவதைக் காணலாம்.
இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.
சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.
[தொகு] போக்குவரத்து
சென்னை போக்குவரத்து வரைபடம்
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
MRTS Train station in Chennai
சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை புறநகர் ரயில்வே மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.
An MTC bus in Chennai
சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக சென்னை மாநகரப் பேருந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும் நகரத்தில் ஓடுகின்றன.
[தொகு] தகவல் தொடர்பு
தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல், டாடா இண்டிகாம், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ்.என்.எல், ஹட்ச், ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன.
அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி,சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் டிவி,கலைஞர் நியூஸ்,ராஜ் டிவி,ராஜ் நியூஸ்,ராஜ் டிஜிடல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா டிவி, ஜெயா Max, ஜெயா Plus,Isai Aruvi, எஸ். எஸ் மியூசிக், தூர்தர்ஷன் பொதிகை ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அதிகம் பார்க்கப்படுகின்றன. இரண்டு ஏ.எம், ஒன்பது பண்பலை சூரியன் பண்பலை,ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், அஹா, பிக்,ரெயின்போ பண்பலை, எப் எம் கோல்டு வானொலி அலைவரிசைகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பப் படுகிறது.
தினகரன்,தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி,மாலை மலர் ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கிள் ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம் புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள்.
[தொகு] கல்வி
படிமம்:Thew New College.jpg
சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம்
சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் (Indian Institute of Technology-இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி), அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (National Institute of Fashion Technology-தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (Asian College of Journalism-ஆசிய இதழியல் கல்லூரி), Madras School of Social Work (மெட்ராஸ் சமூகப்பணி கல்லூரி) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன.
வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.
[தொகு] நூலகங்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது. [3]
செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ Indian Rupee symbol.svg 180 கோடி[4] செலவில் கட்டப்பட்டது.
[தொகு] விளையாட்டு
சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம்
மற்ற இந்திய நகரங்களைப் போல சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.
எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும்.
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.
[தொகு] உயிரியல் பூங்காக்கள்
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி
கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.
[தொகு] பிரச்சினைகள்
மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
அதிக மக்கள் தொகை அடர்த்தி
25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது
மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்
வாகன நெரிசல்
மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை